தேசிய சித்தமருத்துவ தினவிழாவை முன்னிட்டு மாரத்தான் ஓட்ட போட்டிகள்
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தகவல்.
ஆறாவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி திருச்சியில் மாரத்தான் ஓட்டம் மற்றும் நடை போட்டிகள் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அகத்திய முனிவர் பிறந்த ஆயில்யம் நட்சத்திர நாளில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு ஜனவரி 9 ஆம் தேதி, தேசிய 6 ஆவது சித்த மருத்துவ தினவிழா திருச்சியில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்வையொட்டி முதல் நாள் 8 ஆம் தேதி காலை மாரத்தான் ஓட்டம் மற்றும் நடை போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். இதில், 2 கி.மீ நடையும், 2 கி.மீ. தொலைவு ஓட்டமும் (முதலில் நடையும் அடுத்ததாக ஓட்டமும் ) நடைபெறும்.
அதாவது போட்டியாளர்கள், கண்டோன்மென்ட் ஐயப்பன் கோயில் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நடந்து கண்டோன்மென்ட், ஒத்தக்கடை, தலைமை அஞ்சலகம் ரவுண்டானாவை சென்றடைய வேண்டும். பின்னர் தலைமை அஞ்சலகத்திலிருந்து ஓட்டமாக புறப்பட்டு ஒத்தக்கடை கண்டோன்மென்ட் வழியாக எம் ஜி ஆர் சிலையை மீண்டும் அடைய வேண்டும்.
இதில் 15 வயது முதல் 25, 26 முதல் 50, 51 வயதுக்கு மேற்பட்டோர் என்று பரிசுகள் தேர்வு செய்யப்பட்டும். மொத்தம் 3 பிரிவுகளிலும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 2 பரிசுகள் வீதம் மொத்தம் 12 பரிசுகள் வழங்கப்படவுள்ளன. போட்டியில் பங்கேற்போருக்கு டி சர்ட்டுகள், குளுக்கோஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.
எனவே போட்டியில் பங்கேற்போர் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி, 7 ஆம் தேதிக்குள் தங்களது பெயர், வயது மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட தலைமை சித்த மருத்துமனையில் நேரடியாகவோ, அல்லது
dsmoofficetrichy@gmail.com என்ற இணையதள முகவரியிலோ விவரங்களை பதிவு செய்யலாம்.
மாரத்தான் போட்டிகளைத் தொடர்ந்து திருச்சி கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள எஸ் பி எஸ் மஹாலில் சித்த மருத்துவக் கண்காட்சி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப்குமார் கண்காட்சிய தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறுநாள் 9 ஆம் தேதி தேசிய சித்த மருத்துவ தினவிழாவும் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இத்தகவலை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் தெரிவித்துள்ளார்.