திருச்சியில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
முதல்வர் வழங்கினார்.
திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.அந்த வகையில் திருச்சியில் இன்று மூன்று இடங்களில் அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இதற்காக
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு முறை சுற்றுப் பயணமாக இன்று (29ந்தேதி) வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 8:30 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் 9:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
பிறகு திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். இதனை பார்த்து மகிழ்ச்சி அடைந்த தொண்டர்கள் பதிலுக்கு கையை உயர்த்தி ஆரவாரம் செய்து மு க ஸ்டாலின் வாழ்க என கோஷமிட்டனர். அப்பொழுது அவருடன் உடன் வந்த இளைஞர் மட்டும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கையை அசைத்து உதயநிதி வாழ்க என தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.
பிறகு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி சிவா எம்பி,திருச்சி மண்டல போலீஸ் ஐஜி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்பி சுஜித் குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ,எம் எல் ஏக்கள் சவுந்திர பாண்டியன், கதிரவன், அப்துல் சமது, மற்றும் தி.மு.க.நிர்வாகிகள்,கோட்ட தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பூங்கொத்து மற்றும் பொன்னாடை வழங்கி, புத்தகங்களை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு இருந்தனர். சென்டை மேளம் முழங்க, தாரை தப்பட்டையுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பிறகு கட்சியினரின்
வரவேற்பை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் முக. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் காரில் நேராக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா பந்தலுக்கு காரில் சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து அண்ணா விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்ட இடத்தில் அரசு விழா தொடங்கியது.
விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்துகொண்டு
திருச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.1,042 கோடி மதிப்பிலான திட்டங்களையும்,
ரூ.655 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 5,639 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்தும்,
மேலும்
ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து
ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில் சமீபத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற
திமுக மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அரசு விழா நிறைவடைந்ததும் திருச்சி மாவட்டம் மணப்பாறை மொண்டிப்பட்டிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
அங்கு ரூ.1,350 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காகித ஆலையின் இரண்டாம் அலகையும் மற்றும் சிப்காட் தொழிற் பூங்காவையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக தொழிற்சாலையை பேட்டரி காரில் சுற்றி பார்வையிட்டார்.
விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, கேஎன். நேரு, சுப்பிரமணியன் மகேஷ் பொய்யாமொழி,
தங்கம் தென்னரசு,மாவட்ட கலெக்டர்பிரதீப் குமார் மற்றும் அப்துல் சமது எம்.எல்.ஏ, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.பிறகு மதியம் சிறிது நேரம் அங்குள்ள ஓய்வறையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் ஓய்வு எடுத்தனர்.
பின் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு
முதலமைச்சர் முக ஸ்டாலின் மாலை 3 மணியளவில் திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி வந்து “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரித்தார். பின்னர் இத்திட்டத்தின் மகத்தான சாதனை நிகழ்வாக 1 கோடியே 1 வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார்..பின்னர் அதே கிராமத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழகத்தில் கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள ரூ பல கோடி மதிப்புள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
மேலும் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிற இடைநிலை சுகாதார செவிலியர்கள்,
தன்னாவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என பத்தாயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் கருவி திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினார்.பிறகு திருச்சி விமான நிலையம் வருகை தந்து அங்கிருந்து தனி விமான மூலம் சென்னை சென்றடைந்தார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. விழாவிற்காக பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று முதலமைச்சர் செல்லும் வழிநெடுகிலும், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், மற்றும் அண்ணா விளையாட்டரங்கம், மொண்டிப்பட்டியில் உள்ள டிஎன்பிஎல் தொழிற்சாலை, சன்னியாசிப்பட்டி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் திமுகவினர் அவரை வரவேற்று டிஜிட்டல் பேனர் மற்றும் அலங்கார வளைவுகள் வைத்திருந்தனர். இதனால் திருச்சி மாவட்டமே விழா கோலம் பூண்டு இருந்தது.