ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முதல் ஜனவரி 1.-ந்தேதி வரை பசுல் பந்து திருவிழாவும், 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இராப்பந்து திருவிழாவும் நடைபெறுகிறது.
2-ந்;தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த புறகாவல் நிலையத்தை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :
கடந்த 2 வருடங்களாக கொரோனா காலக்கட்டம் என்பதால் பக்தர்கள் வருகை மிக குறைந்த அளவு மட்டுமே இருந்தது. இந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரியவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 3000 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
போக்குவரத்து நெரிசல் இன்றி பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல போக்குவரத்து காவலர்கள் அதிக அளவில் பணி நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீராக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 117 சிசிடிவி கேமராக்களும், கோவிலை சுற்றி வெளிபுறத்தில் 92 சிசிடிவி கேமராக்கள் என மொத்தம் 209 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்து தகவல் தெரிவிக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றிலிருந்து (21-ந்தேதி) 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
திறப்பு விழாவின் போது ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, சுந்தர்பட்டர், காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீரங்கம் சரசு உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.