ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சியில் நடைபெறுகிறது.மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.
திருச்சியில் ஜனவரி 8, 9 தேதிகளில் நடைபெறும் :
தேசிய சித்த மருத்துவ தின விழாவில்
மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு.
திருச்சியில் நடைபெறவுள்ள 6 ஆவது சித்த மருத்துவ தின விழாவில் மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் , இணை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் இயக்குநர் த. மீனாகுமாரி தெரிவித்தார்..
இது தொடர்பாக திருச்சி மாவட்ட சித்த தலைமை மருத்துவமனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது :
தமிழர் இனத்தின் பெருமையான சித்த மருத்துவமானது ஒரு பழங்கால மருத்துவ அறிவியலாக மக்களின் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது. சித்த மருத்துவத்தின் தந்தையாக போற்றப்படும் அகத்திய மாமுனிவரின் பிறந்தநாளான மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தேசிய சித்தமருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடப்பு மார்கழி மாதம் 25 ஆம் தேதி ( 2023 ஆம் ஆண்டு சனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில்) 6 ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படவுள்ளது.
தமிழகத்தில் இவ்விழா, திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள எஸ்பிஎஸ் மஹாலில் ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மத்திய ஆயுஷ்துறை அமைச்சரும் மற்றும் கப்பல், துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துதுறையின் அமைச்சருமான சார்பானந்த சோனாவால், ஆயூஷ்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் முன்ச்பரா மஹேந்திரபாய் காலுபாய், தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கவுள்ளனர்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (சிசிஆர்எஸ்), தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (என் ஐ எஸ்) மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் இணைந்து இவ்விழாவை நடத்தவுள்ளன.
சிக்குன் குனியா, டெங்கு, மற்றும் கொரோனா பெருந்தொற்று காலங்களில் பொதுமக்களின் இன்னுயிரை காப்பதில் மகத்தான மருத்துவ சேவை வழங்கிய சித்த மருத்துவத்துறையை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த இந்த நிகழ்வு முன்னெடுத்துச்செல்லும்.விரைவில் இதய நோய், சர்க்கரை வியாதி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையிலும் சித்த மருத்துவத்தின் பலனை உலகம் அறியும் என்றார்.
இவ்விழாவில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள், உதவி மருத்துவ அலுவலர்கள் (சித்தா), மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் பல்நிலை அறிவியலாளர்கள், ஆராய்ச்சி அலுவலர்கள் (சித்தா) மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேசிய மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த (என் ஐ எஸ்) விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று சித்த மருத்துவ முறையின் சமீபத்திய முன்னேற்றங்களையும் ஆக்கபூர்வமான அறிவியல் கருத்துக்களையும் தெரிவிக்கவுள்ளனர் என்றார் அவர்.
பேட்டியின்போது, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சி அலுவலர் யூஜின் வில்சன் உள்ளிட்ட ஆயுஷ் துறை மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.