சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த 9 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ
சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு :
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த
9 பேர் கைது – என்.ஐ.ஏ அதிரடி
திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறி, தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 132 பேர், பயண ஆவணங்கள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் பல்வேறு விதமான குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ) போலீஸார் அவ்வப்போது, திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு சர்வதேச கடத்தல் வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சோதனையின்போது கைதிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகள், டேப் உள்ளிட்டவைகளையும் போலீஸார் கைப்பற்றி சென்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை கேரளத்திலிருந்து, தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ) காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட குழு திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிற்கு வந்தனர். ஏற்கெனவே மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேருக்கு பல்வேறு போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது.
அகதிகள் சிறப்பு முகாம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் உரிய அனுமதி பெற்று கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் ஆட்சியரின் அனுமதியை என் ஐ ஏ அதிகாரிகள் கோரினர். ஆட்சியரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நடவடிக்கையை தொடர அனுமதித்தார். இதனையடுத்து சிறப்பு முகாமுக்கு திரும்பிய என் ஐ ஏ குழுவினர் மாலை வரை முகமில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து முகாமில் தங்கியிருந்த, இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (வயது 42), திலீபன் (33), புஷ்பராஜா என்கிற பூக்குட்டி கண்ணா (41), லடியா (42), அலக பெருமக சுனில் காமினி என்கிற நீலகண்டன் (41), ஸ்டான்லிகென்னடி பெர்னாண்டஸ் (42), தனுக்கா ரோஷன் (40), வெல்லாசுரங்கா, முகமது ஆஸ்மின் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து பிரத்யேக வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இதில் 4 பேரும் மட்டும் இலங்கைத் தமிழர்கள்.
இது குறித்து போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறியது :
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கேரளத்தில் அரபிக் கடலோரம் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் சென்ற இலங்கை படகு சிக்கியது. அதை மீட்டு சோதனையிட்டபோது பல கோடிரூபாய் மதிப்பிலான 300.32 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1000 எண்ணிக்கையில் 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய 6 சிங்களர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நடந்த விசாரணையில் இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளவர்களுடன் அடிக்கடி கைப்பேசியில் பேசிய விவரம் தெரியவந்தது. மேலும், முகாமில் இருந்தவாரே, கடத்தல் கும்பலிடம் தொடர்பு கொண்டு பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது மேற்கண்ட 9 பேரிடமிருந்தும் கைப்பேசிகள், லேப்டாப்,டேப், தங்க நகைககள், சிம்கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டுகளில் நடந்த பதிவுகளை ஆய்வு செய்து அவை ஆவனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே திங்கள்கிழமை மீண்டும் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமுக்கு வந்த என் ஐ ஏ குழுவினர் சில மணிநேரங்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர் உரிய அனுமதி பெற்று 9 பேரையும் கைது கைது செய்துள்ளனர். தொடர்ந்து சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் அனைவரையும் ஆஜர் படுத்தி, அதன்பின்னர் புழல் சிறையில் அடைக்கவுள்ளனர். அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவலில் எடுத்து கேரளத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். மேலும் இந்த கடத்தல் சம்பவங்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.