திருச்சியில் சிகரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திருநாவுக்கரசர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சிகரம் இயக்குனர் சுரேஷ் குமார் வரவேற்றார். அருட்தந்தை அந்தோணி இருதயராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
இயேசுநாதர் இந்த மண்ணில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். மனிதர்களிடையே நற்பண்பு, அன்பு, சகிப்புத்தன்மை, மன்னிப்பு போன்றவற்றை போதித்தார். குறிப்பாக பிறரை நேசித்து வாழ கற்றுத் தந்தார். மக்களின் பாவங்களைப் போக்க தாமே துயரங்களை சுமந்தார்.
அவரது போதனைகளை உலகத்தின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தேவாலயம் சார்பில் நடத்தப்படும் பள்ளி குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ.1 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை தனது சொந்த செலவில் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இந்த விழாவில் நிர்வாகிகள் பெனட் அந்தோணி ராஜ், கே.ஆர்.ராஜலிங்கம், கள்ளிக்குடி சுந்தரம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட கானா பாடகர் வாழ கலந்து கொண்டு திரைப்பட பாடல்களை பாடி பொதுமக்களை மகிழ்ந்தார்.