Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.

0

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இதனால் முன்னிலை ரன்களுடன் சேர்த்து வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்சில் விளையாடிய வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், வங்காளதேச அணி வெற்றி பெற கடைசி நாளில் 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று ஆட்டம் தொடங்கிய 1 மணி நேரத்தில் இந்திய அணி வங்கதேச அணியின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய இந்திய சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.