கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்
சங்கம் அமைக்க, பொருட்கள் வாங்க
தாட்கோ மூலம் ரூ.1 லட்சம் மானியம்.மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் அமைக்கவும் அவற்றுக்குத் தேவையான பொருட்கள் வாங்கவும் தாட்கோ நிறுவனம் மூலம் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது :
தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும், அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள் (கேன்கள்) பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்கவும் மான்யமாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65 வயது வரையும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமமலும் இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெறாதவராகவும் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருப்பதும் அவசியம்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர் புகைப்படம்,சாதிச்சான்று,வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலை. ராஜா காலனி அருகே அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.