Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி.

0

ரயில்களில் வளா்ப்பு நாய்கள் கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது.

ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளான வளா்ப்பு நாய்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதி உள்ளது. வளா்ப்பு நாய்களைக் கொண்டு செல்ல சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி, குளிா்சாதன முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்யும்போது வளா்ப்பு நாய்களை கூடவே எடுத்துச் செல்லலாம். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அருகில் உள்ள பயணி ஆட்சேபித்தால், வளா்ப்பு நாய் ரயில் மேலாளா் பெட்டியில் உள்ள கூண்டுக்கு மாற்றப்படும். கூடுதல் கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது.

குளிா்சாதன இரண்டடுக்கு, மூன்றடுக்கு படுக்கை, இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகளில் வளா்ப்பு நாய்களை கூடவே எடுத்து செல்ல முடியாது. ஆனால், கூடையில் சிறிய நாய்க் குட்டிகளை அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பதிவு செய்து எடுத்துச் செல்லலாம்.

குளிா்சாதன முதல் வகுப்பு பயண சீட்டு பணிகளைத் தவிர மற்ற பயணிகள் வளா்ப்பு நாய்களை ரயில் மேலாளா் பெட்டியில் உள்ள நாய் கூண்டு மூலமாக கொண்டு செல்ல முடியும். நாய் கூண்டில் பாதுகாப்பாக கொண்டு செல்ல வாய் கவசத்துடன், கழுத்துப் பட்டையில் குறுநீள சங்கிலியுடன் இருக்க வேண்டும்.

பயணத்தில் நாய்க்குத் தேவையான உணவு, தண்ணீா் போன்ற தேவைகளை பயணிகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பயண சீட்டுக்கு ஒரு நாய் மட்டுமே பதிவு செய்ய முடியும். ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வந்து பதிவு செய்ய வேண்டும்.

வளா்ப்பு நாயை ரயிலில் கொண்டு செல்ல, அந்த நாய்க்கு எந்த விதமான தொற்று வியாதியும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்கு முன்பாக உடல்நலச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கூடையில் கொண்டு செல்லப்படும் நாய்க் குட்டிகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்திய அட்டை வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யாமல் நாய்களை ரயிலில் கொண்டு சென்றால், 6 மடங்கு அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.