திருச்சியில் மணல் லாரிகளை வழிமறித்து பொதுமக்கள் போராட்டம்.
திருச்சி அருகே, பனையபுரம் பகுதியில் விதிகளை மீறி மணல் லாரிகள் இயக்குவதாக கூறி பொதுமக்கள் 2 லாரிகளை வழி மறித்து போராட்டம் மேற்கொண்டனர். இதில் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் மற்றும் திருவானைக்காவல் கல்லணை சாலையில் உத்தமர்சீலி ஆகிய பகுதியில் (கொள்ளிடம் ஆற்றில்) மணல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த சில நாட்களாக செயல்படாமல் தடை பட்டிருந்த மணல் குவாரிகள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.
இந்த குவாரிகளில் திருச்சி மாவட்டத்துக்குள் விநியோகிக்க மட்டுமே உரிமம் (பர்மிட்) வழங்கப்படுகிறதாம். ஆனால், இப்பகுதிகளிலிருந்து மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் உரிமம் இன்றி மணல் கடத்திச் செல்லப்படுவதாக உத்தமர்சீலி மற்றும் பனையபுரம் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அதிமுக கட்சி பிரமுகர் மணல் கர்ணன் தலைமையில், இரு கிராமத்தினரும் சேர்ந்து, பனையபுரம் பகுதியில் சென்ற இரு லாரிகளை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கொள்ளிடம் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால், இதற்கிடையே, லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, லாரிகளை மறித்தது யார் ? என பொதுமக்களை மிரட்டும் தொணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மணல் கர்ணனை போலீஸார் இழுத்துச் சென்றதில் அவருக்கு காலில் காயமும் ஏற்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து கர்ணனை விடுவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் மீண்டும் சில மணி நேரம் கழித்து, சுமார் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பனையபுரம் கிராமத்துக்குள் சென்று, மணல் லாரிகளை மறிப்பவர்களை கைது செய்வோம் எனக்கூறிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது இரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.