திருச்சி பாரில் வெளிநாட்டு வாழ் தமிழர் அடித்து கொலை. பாரை மூட நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர். பொதுமக்கள் எதிர்பார்ப்பு ?
திருச்சி பாரில் தகராறு :
வெளிநாடு வாழ் தமிழர் அடித்துக் கொலை.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மதுக்கூடத்தில் நடந்த தகராறில் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி சுப்பிரமணியபுரம், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்
ர.சின்னத்துரை (வயது 46). லண்டனில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர் அண்மையில் கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் குடிபுகு விழாவுக்காக திருச்சி வந்திருந்தார்.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், நவம்பர் மாதம் அவர் லண்டன் திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10மணி அளவில் திருச்சி குட்செட் பாலம் இறக்கத்தில் உள்ள (முடுக்குப்பட்டி) உள்ள அரசு மதுக்கடையில் உள்ள பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே மது குடித்து கொண்டிருந்த முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன், உலகநாதபுரத்தை சேர்ந்த சரவணன், தீடீர் நகரைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அருகில் அமர்ந்து மதுக்குடித்துக்கொண்டிருந்த சின்னதுரை அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இதில், தர்மன், சரவணன் இருவரின் கோபமும் சின்னதுரை பக்கம் திரும்பியுள்ளது. இருவரும் சேர்ந்து சின்னதுரையை சராமாரியாக கைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த சின்னதுரையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.காலை 11:30 மணிக்கு பாரில் நடந்த கொலைகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தர்மன், சரவணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
வழக்கமாக டாஸ்மாக் பார் 12 மணிக்கு தான் திறக்க வேண்டும் ஆனால் 24 மணி நேரமும் செயல்படும் இந்த பாரில் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தை சேர்ந்த ராக்கெட் வேகத்தில் செயல்படும் எஸ் எஸ் ஐ ஒருவர் மாமூலாக தந்த தைரியம் தான் இது என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். இந்த பாரில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் போதையில் சாலையை கடப்பதால் அடிக்கடி இந்த பாலத்தின் இறக்கத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றது.தற்போது கொலையும் நடந்து விட்டது.
ஏற்கனவே உறையூர் பாரில் கொலை நடந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை மூட உத்தரவிட்டார்.அதேபோன்று பொது மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.