மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ.74 லட்சம் மோசடி புகார் குறித்து கருத்து கேட்புக்கூட்டம் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.



மல்லியம்பத்து ஊராட்சியில் :
எழுந்த மோசடி புகார் தொடர்பாக
கருத்துக் கேட்புக் கூட்டம் போஸீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து ஊராட்சியில் ரூ. 74 லட்சம் மோசடி புகார் குறித்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கருத்துக்கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சியில் வசூலிக்கப்பட்ட வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் பல்வகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தரப்பிலும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விளக்கம் கேட்டு ஊராட்சித் தலைவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்ப்பட்டது.
அதில், மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போலியான ரசீதுகள் மூலம் ரூ .74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக, 15 நாள்களுக்குள் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், மல்லியம்பத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரின் அனுமதி இல்லாமல், ஊராட்சி பதிவேடுகளை எடுத்து சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. எனவே, என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு (பிரிவுகள் 203 மற்றும் 205 ) தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை புகார் அளித்தும் அவற்றை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸ்க்கு உரிய விளக்கம் அளிக்கவும் விக்னேஷ்வரனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவு 205(1) ன் கீழ் விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் ஊராட்சி தலைவர் தரப்பில் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக ஊராட்சிமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி கருத்துக்கேட்புக் கூட்டம் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகர் தலைமையில், உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன.
இதில் ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன், துணை தலைவர் கல்பனா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சி தலைவர் 21 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ரூ.74 லட்சம் கையாடல் செய்ததாக 6 உறுப்பினர்கள் விளக்கி கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் கையாடல் செய்த ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து, அவர் மீது வழக்கு பதிந்து ரூ.74 லட்சத்தை வசூல் செய்ய வேண்டும் எனவும் மனு கொடுத்தனர். இதில் 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில், காவல் ஆய்வாளர்கள் பாலாஜி, வீரமணி தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

