திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம். கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.


திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கடும் மோதல்; கூச்சல் குழப்பம்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் வைத்திநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி
ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,, துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் கவுர்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசினார்கள்.
கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:-
கோ.கு.அம்பிகாபதி ( அதிமுக):
திருச்சி மாநகராட்சி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது இதனால் மாநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இந்நிலையில் அடுத்த மூன்றாவது மாதத்தில் மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்குகிறது எனவே மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை எடுக்க வேண்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அனுசியா ரவிசங்கர், அரவிந்தன் ஆகியோர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தனர்.
அப்போது திமுக கவுன்சிலர்கள் மாமன்றத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அனுசியா, அரவிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து மாமன்ற அதிமுக கட்சி தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி கூறும்போது, தற்பொழுது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த மின் கட்டணத்தை உயர்த்தியது குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேச விடாமல் தடுத்தனர். மாமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசத்தான் கவுன்சிலர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது திமுக கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுப்பது ஏன்? திருச்சி மாநகராட்சியில் அதிமுகவின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மின்கட்டணம் உயர்வு குறித்து சட்டசபையில் தான் பேச வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கூறுகிறார்கள். திருச்சி மாநகராட்சி எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் மின் கட்டணம் கட்டவில்லையா? புதிய மின் இணைப்பு பெறவில்லையா? இவர்கள் பாதிப்பு அடையவில்லையா.? என்று கூறினார் .
அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் கூறும் பொழுது மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் என்ன கருத்துக்களை சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேச விடாமல் தடுக்கின்றனர்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரி உயர்வை மக்கள் மீது திணிக்கின்றனர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று கூறினார்.
ஜவஹர் (காங்கிரஸ்):
திருவரங்கத்தில் பஸ் நிலையம் அமைய உள்ளது. அந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு ,மேயர் அன்பழகன் ஆகியோருக்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டிற்கு இடம் ஒதுக்கி இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இது 35 ஆண்டுகால கோரிக்கையாகும். மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய அமைச்சருக்கும், அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் சித்திரை வீதி, உத்திரவீதி, சாத்தார வீதி உள்ளிட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) :
எனது வார்டுக்கு உட்பட்ட தென்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்போது காய்ச்சல் காலம் நிலவி வருவதால் பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நீக்க வேண்டும். மக்களுக்கு உரிய மருத்துவ சேவையினை வழங்க வேண்டும். மழைக்காலம் நெருங்கி வருவதால் சத்யா நகர்,அண்ணாநகர் மற்றும் எனது வார்டு பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்.
தொடர்ந்து திமுக கவுன்சிலர் ராமதாஸ் பேசும்போது,
முன்பு போலவே வார்டுக்குள் நடைபெறும் பணிகளை அதிகாரிகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.
மதிவாணன்.
மண்டல குழு தலைவர்( திமுக)
திருவரம்பூர் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் பன்றி காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வரும் அபாயம் உள்ளது
எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஞ்சுளா தேவி(திமுக)
கருமண்டபம் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது அதேபோன்று சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளன.அதனை நிறைவேற்ற வேண்டும்.
சுஜாதா (காங்கிரஸ்)
ஓயாமரி சுடுகாடு கொட்டகை ஒழுகுகிறது. காரியங்கள் செய்வதற்கு உள்ள அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனை உடனடியாக பராமரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிக் பாஷா (திமுக)
எங்கள் வார்டுக்கு கூடுதல் லைட்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 40 வால்ட்டேஜ் ஆக உயர்த்த வேண்டும். அது மட்டுமல்லாமல் சிங்காரத்தோப்பு பகுதியில் ஹைமாஸ் லைட் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில் (திமுக)
நீங்கள் 65 வார்டுகளுக்கும் தானே தந்தை. அப்படி என்றால் 65 வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து வழங்குவது தானே நியாயம் என்றார்.
அவர் புலவர் போன்று பேசியதால் அவையில் சிரிப்பதை எழுந்தது. அப்போது, மேயர் மாநகராட்சி நிதியை பிரித்து கேட்கிறீர்களா? அல்லது என் சொத்தை பிரித்து கேட்கிறீர்களா என்றார்.
அப்போது காஜாமலை விஜய் எழுந்து
நமக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தாலும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்தி வைக்க முடியாது. ஒவ்வொருவராக தான் நடத்த வேண்டும்.
திமுக கவுன்சிலர் லீலா எழுந்து திமுக தான் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் நிதியை சமமாக பிரித்து வழங்க வேண்டும் என்றார்.அதற்கு மேயர் 65 வார்டுகளுக்கும் தல 50 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஹைவே உள்ளிட்ட பகுதிகள் வருவதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கூட்டத்தில் பேச வேண்டியதை சபையில் பேசக்கூடாது என்றார்.
லீலாவின் பேச்சுக்கு முத்துச்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே மதிவாணன் எழுந்து நிதி ஒதுக்கீடு சீராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திமுக கவுன்சிலர் கலைச்செல்வி பேசும்போது தூய்மை பணிக்கு டாட்டா ஏசி வாகனம் வேண்டும் என்று கேட்டு இதுவரை தரவில்லை என்றார். திமுக கவுன்சிலர் கமல் முஸ்தபா உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள ஆயகாயத்தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,அப்போது மேயர் இரண்டு நாட்களில் ஆகாய தாமரையை இரண்டு நாட்களில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அனைத்து கட்சி கவுன்சிலர்களும் மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

