
திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி போராட்டம்.
முகாம் வாசலில் உறவினர்களும் போராட்டம்-பரபரப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் 165 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செல்போன் பயன்படுத்துவதாக புகார்கள் வந்த நிலையில் கடந்த மாதம் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அன்பு தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிறப்பு முகாமில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மண்ணுக்குள் புதைத்த வைத்திருந்த 155 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 15 பேர் நேற்று காலை திடீரென சிறப்பு முகாம் வளாகத்தில் தங்களிடம் இருந்து பறித்த செல்போனை தர வேண்டும் என்று சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் செல்போன் தர வேண்டும், தண்டனை காலம் முடிந்த எங்களை விடுவிக்க வேண்டும். என்று கோஷம் போட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் மரத்தில் இருந்து கிழே இறங்க வலியுறுத்தினர். அதற்கு போலீஸ் அதிகாரிகளை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால் சிறப்பு முகாமில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
சிறப்பு முகாமில் உள்ள கைதிகளை பார்க்க உறவினர்கள் இன்று வந்தனர் .அப்போது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .இதே போல் முகாம் வாசலில் உறவினர்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவத்தின் போது காம்பவுண்ட் சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்கள் உறவினர்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் நாங்கள் மேலிருந்து கீழே குதித்து விடுவோம் என்று கூறினர்.
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்களை உள்ளே அனுமதித்தனர். அதன் பின்னர் கைதிகள் காம்பவுண்ட் சுவரிலிருந்து கீழே இறங்கினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

