“அரசுப் பள்ளியில் அமுதப் பெருவிழா.” காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவர் சிவகாமி தேசியக் கொடியை ஏற்றினார் .
தலைமை ஆசிரியர் தி. கீதா தமது சிறப்புரையில் தேசத்தின் வரலாற்றையும் மொழியின் வரலாற்றையும் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிம் பாரத தேசத்தின் பெருமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த பிற தேர்வுகளிலும், போட்டிகளிலும் சிறந்து விளங்கியவர்களுக்கும் பள்ளியின் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விடுதலை நாள் விழாவிற்கு மேலும் அழகு கூட்டம் விதமாக நாட்டுப்பற்றை வலியுறுத்தும் பாடல்களுக்கு மாணவர்கள் நடனம் ஆடினர். பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியம்,
ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியில் நடந்த கொடுமைகளையும் அவற்றிற்கு எதிராக விடுதலை வேள்வியில் தன்னை முன்னிறுத்திக் கொண்ட வீர மறவர்களையும், வீரப் பெண்மணிகளையும் வில்லுப்பாட்டு மூலமாக மாணவர்கள் கண் முன் நிறுத்தினார்கள்.
பள்ளியின் தேவைகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் PTA,SMC கூட்டம் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு அனைவருக்கும் இனிப்பு ,சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது . நிறைவாக பள்ளிக்குப் பேருந்து வசதி,
ஊராட்சியின் சார்பில் குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் சத்துணவுக்கூடம் ஆகியவற்றை விரைந்து செய்து தர வேண்டி கோரிக்கை மனு கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது . வெகு சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழாவைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.