ஆம்னி பஸ் நிலைய கடைகள் திடீர் அகற்றம்.
வியாபாரிகள் திடீர் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகாமையில் ஆம்னி பஸ் நிலையம் தனியாக செயல்பட்டு வந்தது. இது தென்க ரயில்வேக்கு சொந்தமான இடமாகும்.
இந்த இடத்தினை 2019 இல் தேவகுமார் என்பவர் காண்டிராக்ட் எடுத்தார். பின்னர் அவர் கடைகளுக்கு தலா ஒன்றரை லட்சம் வீதம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு உள்வாடகைக்கு விட்டார்.
அவரது ஒப்பந்த காலம் முடிந்தது. ஆனால் அவர் கடைகளுக்கு கொடுக்க வேண்டிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
தேவகுமாருக்கு பின்னர் 2020 ல் விஷ்ணு என்பவர் காண்டிராக்ட் எடுத்தார். அவரும் கடைக்காரர்களிடம் அட்வான்ஸ் தொகை கேட்டார். இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த கடைக்காரர்கள் வாடகை மட்டும் செலுத்தி வந்தனர்.
கொரோனா காலத்தில் அவருக்கும் வருவாய் பாதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ்ணு ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். அவர்கள் காலி மனையாக இடத்தை வழங்கினால் மட்டுமே ஒப்பந்தத்தை திரும்பப் பெற முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து விஷ்ணு கடைக்காரர்களிடம் கடையை கடையை செய்ய சொல்லி வந்தார். ஆனால் அவர்கள் அட்வான்ஸ் தொகை திருப்பி கிடைக்காததால் கடையை காலி செய்ய மறுத்தனர்.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
இதுபற்றி அறிந்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 25க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
தகவலறிந்த உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் சம்பவ இடம் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் கடையை சூறையாடியவர்களை கைது செய்ய வேண்டும் மேலும் அட்வான்ஸ் தொகைக்கு உத்தரவாதம் தந்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என உறுதியாக தெரிவித்தனர்.
இதையடுத்து வியாபாரிகளை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போராட்டத்தின் போது வியாபாரிகள் காண்ட்ராக்டர் விஷ்ணு மற்றும் ரயில்வே அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். வியாபாரிகளின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.