Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக போலீசார் தகவல்.

0

 

கே.என்.நெரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு:

இலங்கை கூலிப்படை தலைவனுக்கு தொடர்பு.

குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தகவல்.

திருச்சி தொழிலதிபர் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து விட்டதாகவும், இலங்கையைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். இவர் அமைச்சர் நேருவின் தம்பி ஆவார் .

குவாரி காண்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை வெளிநாடுகளிலும் வர்த்தக தொடர்பை விரிவுபடுத்தி வைத்திருந்தார் ராமஜெயம் .
கடந்த 29 – 03- 2012 ஆம் ஆண்டு திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் முட்புதரில் கட்டுக் கம்பிகளால் கட்டப்பட்டு,உடல் போர்வையால் சுற்றப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருந்தார். இதுகுறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர். இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் அதே வருடம் ஜூன் மாதம் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது .
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரது மனைவி லதா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மனு விசாரணையின்போது ஆஜரான சிபிசிஐடி போலீசார் குற்றவாளியை நெருங்கிவிட்டோம், விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அப்போது ஜூலை 24-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கடுத்த நாட்களில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் போதிய முன்னேற்றம் இல்லை.இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தது. இதன் காரணமாக உயர்நீதி மன்றம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அந்த குழு முதலில் இருந்து விசாரணையை தொடங்கியது.

தற்போதைய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு மாருதி கம்பெனி வாகனம் ஒன்று வந்ததாகவும், அந்த வாகனம் கோட்டை ரயில் நிலையம் ரவுண்டானா சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட அந்த ரக வாகனங்களின் அடையாளங்கள் ஆராயப்பட்டு வருகிறது. ராமஜெயம் கடத்தப்பட்ட பிறகு டூவீலரின் பிரேக், ஆக்சிலேட்டர் கேபிள்களால் கை, கால்கள் கட்டப்பட்டு, உடலெங்கும் கம்பிகளால் சுற்றப்பட்டு ஏறக்குறைய ஒரு மணிநேரம் குறிப்பிட்ட ஒரு முக்கிய நபரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு, அந்த நபர் வந்தவுடன் நேரில் ராமஜெயம் ஆஜர்படுத்தபட்டதாகவும், வந்த அந்த நபர் குண்டூசிகளால் ராமஜெயத்தின் உடல் முழுவதும் குத்திய பின்னரே கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமஜெயம் கொலையில் கொலைக்கான காரணங்களில் பெண்கள் விவகாரம், பஞ்சாயத்து பேச்சுவார்த்தை, மணல் விவகாரம், இடப் பிரச்சனை ஆகியவை முன்வைக்கப்பட்டு விசாரணை பல கோணங்களில் நடந்து வருகிறது. உடலெங்கும் கம்பிகளால் சுற்றப்பட்டு கொலை நடந்திருப்பதை பார்த்தால் இது ஆந்திர பாணியில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் நடந்திருக்கும் கூலி கொலைகள் அனைத்தும் இந்த மாடலில் நடப்பதாகவும், இந்த கொலையும் அதேபோல் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல் இதேபோன்று நடக்கும் கொலைகள் இலங்கையில் நடப்பது வழக்கமான ஒன்று என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்கான திட்டம் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உருவானதாகவும், அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் ஆந்திர கூலிப்படைகளிடம் பேசி இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராமஜெயம் கொலையை பொருத்தவரை கொலையின் சூத்திரதாரியை நெருங்கி விட்டதாகவும், பயன்படுத்திய ஆயுதங்கள் கொலையாளிகள் யார்? என ஒரு க்ளு கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.