திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது என்னால் உறுதி தரப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி திருச்சி ஜங்ஷன் அருகில் 0/2 ரெயில்வே மேம்பாலம் சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் ஒரு பகுதி கட்டி முடிக்கப்படாமல் இருந்தது.
தற்போது அதற்கான காரணமாக இருந்த பாதுகாப்புத் துறைக்குச் (Defense Land) சொந்தமான 0.663 ஏக்கர் இடத்தை மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு பெற்றுத் தந்து, இப்பாலம் கட்ட கடந்த 9.112021 நாளிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சக கடிதத்தின் வாயிலாக நெடுஞ்சாலைத் துறைக்கு (Working permission) பணிகள் மேற்கோள்ள அனுமதி வழங்கப்பட்டது. ரூபாய் 8,45,72,961 (எட்டு கோடியே நாற்பத்தைந்து லட்சத்து எழுபத்திரண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்று) E.V.I. (Equal Value Infrastructure) திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைத் துறை நிதியினை மத்திய பாதுகாப்புத் துறைக்கு வழங்கி பணிகள் மேற்கொள்ள பாதுகாப்புத் துறை அனுமதி வழங்கியது.
இந்த E.V.I. திட்டத்தின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) M.O.U. பாதுகாப்புத் துறையின் சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் தமிழக நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இடையில் நேற்று முந்தினம் மாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினரானது முதல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை பலமுறை நேரில் சந்தித்தும், கடிதத்தின் வாயிலாக வற்புறுத்தியும், பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் வாயிலாக பாராளுமன்றத்திலும் வற்புறுத்தியும். மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர், இயக்குநர் என பலரையும் வலியுறுத்தியும், அதுபோல் தமிழக தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரையும் பலமுறை தொடர்பு கொண்டும் இப் பணி நிறைவேற்றிட தொடர் முயற்சிகளை விடாமல் மேற்கொண்டேன்.
இம் முயற்சி கை கூட துணை நின்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோருக்கும் மற்றும் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அனைத்து அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்புத் துறை சம்மந்தப்பட்ட 0.663 ஏக்கர் நிலம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் சிறிய தொடக்க நிகழ்சிகளோடு பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்பட்டு, பொது மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தேர்தல் கால முக்கிய வாக்குறுதியான எட்டு ஆண்டுகாலமாக கிடப்பில் கிடந்த இப் பணியை பொது மக்களுக்காக நிறைவேற்றித் தரும் கடமையை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.