சாலைகள் போடாமல் பில் தொகை எடுத்தால், திமுகவினர் என்றாலும் நடவடிக்கை.திருச்சியில் அமைச்சர் ஏ.வ. வேலு பேட்டி.
சாலைகள் போடாமல்
பில் தொகை எடுத்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை
அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று பார்வையிட்டார் –
நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,
மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா வேலு கூறியபோது:-
திருச்சி மாவட்டத்தில் மாநில சாலைகள் , மாவட்ட சாலைகள் கிராம சாலைகள் என நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 2131 சாலைகள் இருக்கின்றன.
இதில் 190 சாலைகளை மேம்படுத்த ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழி சாலைகள் நான்கு வழிச்சாலைகள் ஆகவும், நான்கு வழிச்சாலைகள் ஆறு வழிச்சாலை களாகவும் விரிவுபடுத்தப்பட வருகிறது. இந்த திட்டத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 32 சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் முதல் திருச்சி வரையிலான சாலை ரூ.75 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இப்பணிகளை இன்று மூத்த அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டம் வருகிற ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெறும் அதேபோன்று சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.5 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் ஓடத்துறை அண்ணா சிலை கலைஞர் அறிவாலயம் ஆகியவற்றை இணைக்கும் உயர்மட்ட பாலத்துக்கு 2.63 கோடியிலும் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது .
சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் திருச்சி மாவட்டத்திற்கு அறிவித்துள்ள உயர்மட்ட பாலங்கள் சாலைகள் அத்தனையும் 100% நிறைவேற்றப்படும்.
பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வீஸ் சாலை அமைக்க
2ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதனை தேசிய நெடுஞ்சாலை துறை தான் செய்ய முடியும்
அதே போல் தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது – இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்.
பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது .
டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது என்ற கேள்விக்கு கண்டிப்பாக இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம், டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எனக்கும் வந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் பில் தொகை எடுத்ததற்காக 9 அதிகாரிகளை நான் சஸ்பெண்ட் செய்து இருக்கிறேன். இது வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பத்தாண்டுகளில் நடந்த தவறுகளை களைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக, திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிற ஜெயக்குமாரின் கருத்துக்கு
நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கருணாநிதி. கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி. அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
இறுதியாக இது குறித்து கருத்து கூறிய அமைச்சர் கே.என் நேரு
நான் இதற்கு பதில் சொல்வேன். ஆனால், சென்சாரில் கட் ஆகி விடும்” என்றார.