உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, அரசு சொந்த செலவில் மீட்டு வர
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் வலியுறுத்தல்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த மீளாய்வு, கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரபீக் அகமது, பி.அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் உமர் பாரூக், எஸ்.அகமது நவவி, எம்.நிஜாம் முகைதீன், பொருளாளர் எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்கள் டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம், மாநில அமைப்புச் செயலாளர் நஸூருத்தீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா, வி.எம்.அபுதாஹிர், பஷீர் சுல்தான், வழ.ராஜா முகமது, ஷபிக் அகமது, சுல்பிகர் அலி, வழ.சபியா, பயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், டாக்டர். ஜமிலுன் நிஷா, முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்த மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தனித்துக் களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆளுங்கட்சியின் அதிகார பலம், பண விநியோகம், கூட்டணிகள் என அனைத்தையும் தாண்டி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர் மற்றும் அதனால் அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மிகவும் கவலைக்குரியது. உக்ரைனில் நடக்கும் போரால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் நமக்கு கவலையை ஏற்படுத்துகிறது. அங்கு சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்டெடுப்பது குறித்த இந்திய நிர்வாகத்தின் அறிவிப்புகள் நம்பிக்கை அளிக்கிறது.
அதேநேரத்தில் விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக இச்சூழ்நிலையை கருதுவது மிகுந்த கவலையை அளிக்கின்றது. ஆகவே, மிக ஆபத்தான சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்கள் மீது விமான பயணத்திற்கான கட்டணச் சுமையை சுமத்தாமல், அரசாங்கம் தனது சொந்த செலவில் அவர்களை மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது.
கூடங்குளம் அணுக்கழிவுகளை, அணு உலை வளாகத்திலேயே பள்ளம் அமைத்து பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் விவசாய நீரில் அணுக்கதிர் வீச்சு கலக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமிக்கும் திட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

