ஆற்று மணலைப் பாதுகாக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ஆற்று மணலை பாதுகாக்க கோரி
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதை மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் கலப்பதை தடுக்க கோரியும், காவிரி கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா கர்நாடகத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிப்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மேகராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் பொதுச் செயலாளர் தினேஷ், செய்தி தொடர்பாளர் பிரேம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர் .
போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது கலெக்டர் சிவராசு வந்தார் .
பின்னர் அவர் அய்யாக்கண்ணு விடம் கோரிக்கை மனுவை என்னிடம் தாருங்கள். நான் மாநில அரசுக்கு தெரியப் படுத்துகிறேன் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலெக்டர் சிவராசு சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருச்சியில் உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இடம் லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்க மறுத்தால் நெல்மணிகளை உடனே கொள்முதல் செய்யாமல் காலதாமதம் செய்கிறார்கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் இடம் பெற்றிருந்தன.