அரியலூர் மாணவி தற்கொலை செய்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள், திமுக எம் எல் ஏவிடம் விசாரிக்க உள்ளனர்
அரியலுார் மாவட்டம், வடுகம்பாளையத்தை சேர்ந்த மாணவி திருக்காட்டுப்பள்ளி அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி ப்ளஸ்2 படித்து வந்தார்.
இவர், கடந்த மாதம் 9ம் தேதி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தார்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும், என்று கட்டாயப்படுத்தியதால், மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. மத மாற்றத்திற்கு வற்புறுத்தியதால் தான், தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று, மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட, நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவி படித்த பள்ளி நிர்வாகம், விடுதி வார்டன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகள், மைக்கேல்பட்டி கிராம மக்கள் மற்றும் மாணவியின் பெற்றோர், மாணவி பேசிய வீடியோவை மொபைல் போனில் பதிவு செய்தவர்களிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,
திருக்காட்டுபள்ளி போலீஸ் ஸ்டேசனில் மாணவி தற்கொலை வழக்கை பதிவு செய்த விசாரணை அதிகாரி,
சிறைச்சாலையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த விடுதி வார்டன் சகாயமேரியை சிறைக்கே சென்று வரவேற்ற
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும்,திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏவுமான இனிகோ இருதயராஜ் ஆகியோரிடமும், விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.