Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி 24வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணியை அறிமுகப்படுத்தினார் அமைச்சர் கே.என்.நேரு.

0

 

திருச்சி திருச்சி மாநகராட்சி 24 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி வெற்றி பெற்றால் உள்ளாட்சித் துறையின் அனைத்து நலத்திட்டங்களும் வார்டு மக்களுக்கு விரைந்து கிடைக்கும் என்று அமைச்சர் நேரு கூறினார்.

திருச்சி மாநகராட்சி 24 வது வார்டு மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் மனைவி சோபியா விமலா ராணி அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருச்சி புத்தூர் சண்முகா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் பேசுகையில்,

திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணிக்கு வாக்கு கேட்பதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த வார்டில் போட்டியிட திமுகவினர், நிர்வாகிகள் ஏராளமானோர் வாய்ப்பு கேட்டு மனு அளித்தனர்.

ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இந்த வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 7 வார்டுகள் கேட்டனர். பின்னர் 4-வார்டு முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில் ஐந்தாக உயர்ந்தது. 5வது வார்டாக 24வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனடிப்படையில் திருச்சியின் பிரபல பொறியாளர் பேட்ரிக் ராஜ்குமார் மனைவி சோபியா விமலா ராணி இந்த வார்டில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வார்டில் திமுக வெற்றி பெறவில்லை. தொடர்ந்து மாற்று கட்சியினர் தான் வெற்றி பெற்று வந்தனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்த வார்டுக்கு எதுவுமே செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நாங்களே பாராட்டி இருப்போம். இந்த பகுதியில் அமைச்சர் ஒருவரே இருந்தார். இருந்தும் எவ்வித நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

தற்போது குடிநீர் தேவை என்றால் ஒரு மணி நேரத்தில் செய்து கொடுக்கக் கூடிய வசதி வாய்ப்புகள் உள்ளது. நகராட்சி துறை அமைச்சராக நான் இருக்கிறேன். இந்த வார்டில் பட்டா வழங்குவதற்கு பட்டியல் தயாராக உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும்.

இந்த வார்டுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளும் செய்து கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து சோபியா விமலா ராணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழக முதல்வருக்கு உறுதுணையாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த வார்டுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க எங்களுக்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அனைத்து பணிகளும் வார்டுக்கு விரைவாக கிடைக்கும்.

சென்னை மாநகராட்சியின் எல்லையை போல் திருச்சி மாநகராட்சி எல்லையையும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. தற்போது ஊரகப் பகுதிகளில் வெற்றி பெற்ற தலைவர்கள் இருப்பதால், மாநகராட்சி எல்லை விரிவு படுத்தப் படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்படும். உறையூர் பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக 43 கோடி ரூபாய் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகரில் கலங்கலாக வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து இது போன்ற பணிகள் நடைபெற காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திருச்சியில் முதல்வரிடம் வழங்கப்பட்ட 80,000 கோரிக்கை மனுக்களில் 50,000 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சியின் கலை இலக்கிய பிரிவு மாநில துணைத் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோவன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 24வது வார்டு வேட்பாளர் சோபியா விமலா ராணி வாக்குகள் சேகரித்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.