வெஸ்ட் இண்டீஸில் ‘ஜூனியர்’ (19 வயதுக்கு உட்பட்ட) உலக கோப்பை தொடரின் 14வது சீசன் நடக்கிறது.
மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன.
‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா (45 ரன் வித்தியாசம்), அயர்லாந்து (174 ரன்), உகாண்டா (326 ரன்) அணிகளை வீழ்த்தி, பட்டியலில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் நேற்று வங்கதேசத்தை சந்தித்தது.
கொரோனாவில் இருந்து மீண்ட, இந்திய அணி கேப்டன் யாஷ் துல், ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
வங்கதேச அணி துவக்கத்திலேயே ஆட்டங்கண்டது.
‘வேகத்தில்’ மிரட்டிய ரவிக்குமார், இஸ்லாம் (2), இப்திகார் (1), நவ்ரோஸ் (7) என வரிசையாக ‘டாப் ஆர்டரை’ கழற்றினார்.
மொல்லா 17 ரன் எடுத்தார். ஆரிபுல் (9), பகிம் (0) இருவரும் விக்கி ‘சுழலில்’ சிக்கினர்.
கேப்டன் ரகிபுல்லை (7), டாம்பே வெளியேற்ற, வங்கதேசம் 56/7 ரன் என திணறியது.
பின் மெஹரோப் (30), ஜமான் (16) சற்று உதவ, 37.1 ஓவரில் வங்கதேச அணி 111 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா சார்பில் ரவிக்குமார் 3, விக்கி 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதியில் வரும் 2ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.