தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் இன்று ஆலோசனை நடத்தியது.
சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ள மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் எனத்தெரிவித்துள்ளது.