திருச்சி உறையூரை பூர்வீகமாகக் கொண்டவர் தாமோதரன். இவர் பிஷப்ஹீபர் கல்லூரியில் எம்.காம் படித்துள்ளார்.
இவர் கடந்த 1987-ம் ஆண்டு கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலம் சுகாதார திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுதல், கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் கழிவறை வசதியை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள தாமோதரனுக்கு
தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
இது குறித்து தாமோதரன் கூறியபோது:
கடந்த 2003-ம் ஆண்டு தா.பேட்டை
ஒன்றியம் தாண்டவம்பட்டி கிராமத்தில் இல்லங்கள் தோறும்
கழிவறை அமைக்கும்
முயற்சியை மேற்கொண்டோம். அப்போது அந்த கிராமம் இந்தியாவில் முதல் முழு சுகாதார கிராமமாக அறிவிக்கப்பட்டது.
நாங்கள் இதுவரை தென்மாநிலங்களில் சுமார் 6 லட்சம் தனிநபர் இல்ல கழிவறைகளை அமைக்க காரணமாக இருந்துள்ளோம்.
எங்களது 35 ஆண்டுகால சமூகப்பணி இதுவரை வெளியே தெரியாமல் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள இந்த விருது மூலம் எங்களது பணி வெளியே தெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மாத விடாய் சுகாதாரம் குறித்தும், ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கிராமாலயா தொண்டு நிறுவன ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு செயல்பட்டதால் இந்த உயரிய விருது கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு எனக்கு டாய்லெட் டைட்டன் என்ற விருது வழங்கப்பட்டது.
மேலும் பத்மஸ்ரீ விருதை கிராமாலயா நிறுவன பணியாளர்கள் மற்றும் சமுதாய பணியாற்ற ஒத்துழைக்கும் என் குடும்பத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார்.