தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி, தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் விளையாடியது.
தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரரான டி காக் சதம் அடித்து அசத்தினார். 130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் வான்டெர் துஸ்சென் 52 ரன்களும் (59 பந்துகள்) டேவிட் மில்லர் 39 ரன்களும் (38 பந்துகள்) பிரிட்டோரியஸ் 20 ரன்களும் (25 பந்துகள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்கள் முடிவில் 287 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதையடுத்து 288 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்க்காரர் கே.எல்.ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து தவனுடன் விராட் கோலி கைகோர்த்தார். இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவன் 61 ரன்னிலும், கோலி 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணியை கடைசி கட்டத்தில் தீபக் சாகர் 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து ஆட்டத்தை திசைதிருப்பினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அருகேதான் கொண்டு செல்லவே முடிந்தது.
பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போராடி தோற்றது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை தென்னாப்பிரிக்காவின் டிகாக் வென்றார்.