திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
விரிவாக்க முயற்சி தோல்வி.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. அந்த வார்டுகள் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி முழுமையாகவும், ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிட்ட வார்டுகள் மாநகராட்சியுடன் இணைந்துள்ளன.
அதாவது ஸ்ரீரங்கம் தொகுதியில் 6 வார்டுகள், திருவெறும்பூர் தொகுதியில் 13 வார்டுகள், திருச்சி கிழக்கு தொகுதியில் 24 வார்டுகள், திருச்சி மேற்கு தொகுதியில் 22 வார்டுகள் இடம்பெற்றுள்ளன. வார்டு எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்கும் நோக்கில் மாநகராட்சி பகுதியையொட்டி உள்ள 25 பஞ்சாயத்துக்களை இணைக்க முயற்சி நடந்தது. அதற்கான கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
ஒருபுறம் எதிர்ப்பும் கிளம்பியது. எனவே, விரிவாக்கம் செய்யும் முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. அதாவது, தற்போது நடக்க உள்ள மாநகராட்சி தேர்தல் 65 வார்டுகளுக்கு நடத்தப்பட்டு, பிறகு வார்டு எண்ணிக்கையை உயர்த்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.
பிப்ரவரியில் தேர்தல்?
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் ஆயத்த பணியில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதையொட்டி, வாக்காளர் இறுதிபட்டியல், வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு விட்டன.
எனவே, அடுத்த மாதம் (பிப்ரவரி) தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
அதற்கு முன்னேற்பாடாக மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளுக்கு பெண்கள் மற்றும் பொதுப்பிரிவு என ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு விட்டது. அதேபோல விரைவில் எந்தெந்த வார்டுகளில் பெண்கள் போட்டியிடுவது என்ற பட்டியலும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், பெண்கள் போட்டியிடும் வார்டுகள் குறித்த திருத்த பட்டியல் வெளியானது.
50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு
அதன்படியே, பெண்களுக்கான வார்டுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வருமாறு:-
மொத்தம் 65 வார்டுகள். இவற்றில் வார்டுகள் 17, 42 மற்றும் 65 தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டுகள் 6, 8, 15 மற்றும் 62 ஆகியவை தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகளாக 1, 3, 4, 7, 9, 11, 13, 18, 21, 22, 24, 26, 30, 31, 32, 33, 37, 44, 45, 49, 50, 51, 52, 53, 56, 58, 59, 63, 64 ஆகிய 29 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மொத்தத்தில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய வார்டுகளில் ஆண்கள் போட்டியிடுவார்கள்.