ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.56 கோடி மோசடி செய்து, தலைமறைவாக இருந்தவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலை, ரோஜா நகரைச் சேர்ந்தவர் சி.என்.செல்வகுமார் (வயது 63). இவர் சி.என்.செல்வகுமார் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் பண்ணைதிட்டம், விஐபி திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டார்.
இதை நம்பி 140 பேர் மொத்தம் ரூ.5.56 கோடி முதலீடு செய்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி தொகையை திருப்பி அளிக்கவில்லை.
இதையடுத்து, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார் 2013-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, செல்வகுமார் தலைமறைவானார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவர் சென்னிமலை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று காலை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் துரைசாமி, தலைமை காவலர்கள் நடராஜன், சரவணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் சென்னிமலையில் அவரை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ்.ரவி முன்பு செல்வகுமாரை ஆஜர்படுத்தினர்.
பின்னர், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.