திருச்சி, பொன்மலைப்பட்டி சின்ன மாவடிக்குளத்தில்
2 நாளில் ஆக்கிமிப்புகள் அகற்றம் முடிந்தது
திருச்சி, பொன்மலைப்பட்டி அருகே கீழக்குறிச்சி சின்ன மாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், அகற்றி முடிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பொன்மலைப்பட்டி அருகே, கீழக்குறிச்சியில் அமைந்துள்ளது சின்ன மாவடி குளம், சுமார் 19 ஏக்கரில் அமைந்துள்ள இந்த குளத்தில், பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்திருந்தனர்.
ஆக்கிமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. மேலும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தன.
இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம், குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அரசு நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவித்தபடியே செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கின. வருவாய்த்துறையினர், கவல்துறையினர், சமூக நல அமைப்புகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டியிருந்த வீடுகளை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அப்புறப்படுத்திய போது ஜார்ஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அரசு அலுவலர்கள் வீட்டை இடிப்பதில் உறுதியாக இருந்தனர். வேறு வழியின்றி வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள அவகாசம் கேட்டார். அவகாசம் வழங்கப்பட்டது. அவர் வீட்டுப் பொருட்களை நேற்று காலை வேளையிலேயே எடுத்துக்கொண்டதை அடுத்து வருவாய் துறையினர் கட்டடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த விட்டுடன் சேர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அனைத்தும் அகற்றப்பட்டன. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஆக்கிமிப்புகள் இரண்டே நாள்களில் அகற்றம் செய்யும் பணிகளை மாவட்ட நிர்வாகமும், திருவெறும்பூர் வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அனைத்து துறை ஒத்துழைப்புடன் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.