காவேரி பாலத்தை சீரமைப்பு என்ற பெயரில் அதிமுகவினர் பலவீனப்படுத்தி விட்டனர். கே.என்.நேரு குற்றச்சாட்டு.
நன்றாக இருந்த காவிரி பாலத்தை
பராமரிப்பு எனக்கூறி பலவீனப்படுத்தி விட்டனர்.
அ.தி.மு.க.மீது கே.என்.நேரு குற்றச்சாட்டு.
திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. மாநகரின் முக்கிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இப்பாலம் கடந்த 2016-ல் ரூ.1.70 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அப்போது பாலத்தின் அடிப்பகுதியை உறுதிபடுத்துவது, புதிதாக சாலை அமைப்பது, இருபுறமும் நடை பாதை அமைப்பது, பக்கவாட்டு கைப்பிடிச் சுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கட்டுமான பணிகள் தரமின்றி இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி ரூ.35.78 லட்சம் செலவில் மீண்டும் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும், வாகனங்கள் சென்றுவர உகந்ததாக இல்லை. பாலத்தில் ஆங்காங்கே உள்ள இரும்பு காரிடர்களில் பிளவு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
எனவே, இப்பாலத்தை
மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சேதமடைந்த இப்பாலத்துக்கு பதிலாக,
அருகிலேயே புதிய பாலம் கட்டப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ரூ.130 கோடி செலவில்
இப்பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடங்கியுள்ளன.
புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை, தற்போது உள்ள காவிரி பாலத்தை உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1976-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் இந்த காவிரி பாலம் கட்டப்பட்டது. நன்றாக இருந்த பாலத்தை சீரமைப்பு என்ற பெயரில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் சம்மட்டி வைத்து அடித்து பலவீனப்படுத்தி விட்டனர். இதன் காரணமாக புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.130 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒரு வருடத்திற்குள் அதற்கான பணி நடந்து முடியும். மேலும் தற்போது உள்ள பாலம் சீரமைக்கும் பணியும் தொடங்கி 4 மாதத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு,மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ. இருதயராஜ், இனிகோ, பழனியாண்டி, சௌந்தரபாண்டியன்,நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் கேசவன்,தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.