பணம் இருந்தாலும் வேலை கிடைக்காது
படித்தால் நூறு சதவீதம் டி.என்.பி எஸ்சி. தேர்வில் ஜெயிக்கலாம்
என்.ஆர் .,ஐ.ஏ.எஸ். அகாடமி விழாவில் வெற்றியாளர் பேச்சு.
திருச்சி கே. கள்ளிக்குடி என் ஆர்., ஐ.ஏ.எஸ். அகாடமியில் 37வது வெற்றியாளர்கள் விழா நடைபெற்றது.
விழாவுக்கு என்.ஆர் .,ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது
கல்வி ஒன்றே வாழ்வில் ஏற்றத்தைத் தரும். கடந்த 18 ஆண்டுகளில் இந்த பயிற்சி மையத்தில் படித்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டித் தேர்வுகளில் வென்று பல்வேறு பதவிகளை அலங்கரிக்கிறார்கள். ஆகவே நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
பின்னர் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வென்ற மாணவ மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற மாணவி கடந்தாண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் இந்த வெற்றி விழாவில் உடல்நலம் குன்றிய தனது தந்தை பரமசிவம் ,தாய் விஜயராணி ஆகியோருடன் பங்கேற்றார் .
பின்னர் அவர் தனது அனுபவங்களை கூறும்போது,
என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். எம்.எஸ்.சி .பி.எட். முடித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைப் பார்த்து வந்தேன். இந்த நிலையில் கூலி வேலை செய்த எனது தந்தை திடீரென நோய்வாய்ப்பட்டார் .அதன் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கினார். இதனால் அப்பாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
குடும்ப சூழல்
இந்த நெருக்கடியான சூழலில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஓராண்டு பயிற்சி பெற்றேன். அப்போது 7 போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்றேன் .
நான் வேலையை உதறிவிட்டு இங்கே பயிற்சி பெற்று வரும்போது வீட்டுச் செலவினங்களுக்காக எனது தாய் காட்டுப்புத்தூரில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்றார். ஏழாவது முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றேன். இப்போது சொந்த மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கும் வேலை செய்கிறேன் .
இந்த பயிற்சி மையத்தில் படித்தவர்கள் நாடு முழுவதும் வியாபித்து இருக்கிறார்கள். இப்போது தாய் தந்தைக்கு பழைய இரும்பு கடை வைத்து கொடுத்திருக்கிறேன். தாய் தந்தையை சந்தோசமாக வைத்து பார்ப்பது நிறைவாக இருக்கிறது என்றார் .
அவரைத் தொடர்ந்து ரேவதியின் தாய் விஜயராணி பேசும்போது, இந்த பயிற்சி மையத்தில் எனது மகள் சேரும் முன்பு அடிப்பாங்க …திட்டுவாங்க… என்று சொன்னார். நான் அவளிடம் படிக்க தானே திட்டுகிறார்கள். பயப்படாதே அடிச்சாலும் திட்டினாலும் பரவாயில்லை …என்று சொன்னேன் .
உங்கள் பெற்றோரும் கஷ்டப்பட்டு தான் உங்களை படிக்க வைக்கிறார்கள் படித்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் .வேலைக்கு சென்று பெற்றோரை காப்பாற்றுங்கள் என ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.
மண்ணச்சநல்லூர் பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ் சந்துரு என்ற மாணவன் தற்போது திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். சந்துரு பேசும்போது ,நான் பி.இ. முடித்துள்ளேன். எனது தங்கை பிரமிளா பி.எஸ்.சி. முடித்துள்ளார். இப்போது அவள் இந்த பயிற்சி மையத்தில் மாணவியாக இருக்கிறார்.
என் தந்தை ஹோலோ பிரிக்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் தினசரி ரூ. 300 சம்பளத்திற்கு கூலி வேலை செய்து வருகிறார். அம்மா ஒரு மில்லில் ரூ. 200 சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். பெற்றோர் இருவரும் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். எப்படியாவது ஒரு அரசு வேலையில் சேர வேண்டும் என்று கனவு கண்டேன். அப்போது சில நண்பர்கள் பணம் இருந்தால் வேலை வாங்கி விடலாம் என்றார்கள்.
என்னிடம் பணமும் இல்லை .அதனால் படிப்பை மட்டும் நம்பி இந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்.
பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் என்று சொன்ன நண்பர்கள் இன்றளவும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நான் கஷ்டப்பட்டு படித்து குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வேலைக்கு சேர்ந்து விட்டேன்.
இந்தப் பயிற்சி மையத்தில் விஜயாலயன் சார் ஒன் மேன் ஆர்மி மாதிரி. கணிதம் தவிர்த்து அனைத்து பாடங்களையும் நடத்திடுவார் .ஒரு திரைப்படத்தின் கதையை அவர் விளக்கியபோது கிடைத்த அனுபவம் அந்த திரைப்படத்தை பார்த்த போது கூட எனக்கு கிடைக்கவில்லை. தேர்வுக்கு முந்தைய தினம் தேவையான அளவு ஓய்வெடுங்கள். தேர்வு மையத்தில் தூங்கி விடாதீர்கள். கணிதத்தை நன்கு கற்றுக் கொள்ளுங்கள். நான் வேலை பார்க்கும் இடத்தில் 2008ல் இங்கு பயிற்சி பெற்று வெற்றி பெற்றவர் அதிகாரியாக இருக்கிறார்.
ஆகவே எங்கே சென்றாலும் என்ஆர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் நம்மை வழிநடத்துவார்கள் என்றார்.
விழாவில் பங்கேற்ற வெற்றியாளர்களுக்கு இயக்குனர் விஜயாலயன் புத்தகம் பரிசாக வழங்கினார்.
அதனுடன் ஒவ்வொருவருக்கும் ரூ 10 கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் இலவசமாக பெறும் கடைசி பணம் இதுவென உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
வெற்றி விழாவில் பேசிய அனைவரும் இதுவரை லஞ்சம் வாங்கியதில்லை. இனிமேலும் வாங்கப் போவதில்லை என உறுதி ஏற்றுக்கொண்டனர்.