Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

6மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த முஸ்லிம் மந்திரவாதி உள்பட 3 பேர் கைது.

0

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (வயது32). இவரது மனைவி ஷாலிஹா (வயது 24). இவர்களுக்கு, 5 வயதில் ராஜூமுகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

6 மாத குழந்தை ஹாஜரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள இறால் வைக்கும் பிளாஸ்டிக் ஐஸ் பெட்டி தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தது. உடனடியாக இறந்த குழந்தையை மல்லிப்பட்டினம் ஜமாஅத்துக்கு உட்பட்ட முஸ்லிம் மைய வாடியில் அடக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஷ்வரன், டி.எஸ்.பி., செங்கமலக்கண்ணன், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு டி.எஸ்.பி., ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், நசுருதீனின் சித்தி ‌ஷர்மிளா பேகம் (வயது48), இவரது கணவர் அஸாருதீன் (வயது50) என்பதும், இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய நிலையில் அஸாருதீனுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் கேரளாவை சேர்ந்த குறி சொல்லும் மந்திரவாதியான முகமதுசலீம் (வயது48) என்பவரிடம் ‌ஷர்மிளா பேகம் சென்று கேட்டபோது உனது கணவர் உடல்நலம் பெற உயிர் பலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து ‌ஷர்மிளா பேகம் வீட்டை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கோழி மற்றும் ஆடுகளை பலி கொடுத்துள்ளார்.

ஆனாலும் கணவர் உடல் நலம் சரியாகாத நிலையில், மீண்டும் மந்திரவாதி முகமதுசலீமிடம் சென்று குறி கேட்டபோது குழந்தையை நரபலி கொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என கூறினாராம்.

இதையடுத்து வீட்டிற்கு வந்து யோசித்த ‌ஷர்மிளா பேகம் தனது அக்கா மகனான நசுருதீனின் குழந்தை ஹாஜராவை நரபலி கொடுப்பது என முடிவெடுத்துள்ளார். இதன்படி அவர்களது வீட்டிற்கு சென்ற ‌ஷர்மிளா பேகம் யாருக்கும் தெரியாமல் கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் 6 மாத பெண் குழந்தை ஹாஜராவை தூக்கிச்சென்று மந்திரவாதி கூறியபடி நரபலி கொடுத்து விட்டு பின்னர் குழந்தையின் உடலை அங்கு வீட்டின் பின்புறம் உள்ள இறால் வைக்கும் பிளாஸ்டிக் ஐஸ் பெட்டி தண்ணீருக்குள் அமுக்கி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ‌ஷர்மிளா பேகம், அவரது கணவர் அஸாருதீன், கேரளா மந்திரவாதி முகமது சலீம் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.