Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சோமரசம்பேட்டை ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி அருகே அடித்துக் கொலை செய்யபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மல்லியம்பத்து கிராமத்தில் உள்ள மயான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதை மல்லியம்பத்து ஊராட்சியின் முயற்சியில் ஆக்கிரமிப்பு நிலம் ஊராட்சி நிர்வாகத்தால் மீட்கப்பட்டது.

ஆனால் திடீரென ஊராட்சி நிர்வாகத்தால் மீட்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் நில அளவு கற்களை மர்மநபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

மயான நிலம் மீட்கப்பட்டதற்கு சிவகுமார் ஊராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் வீட்டில் இருந்த சிவக்குமாரிடம் அதே ஊரை சேர்ந்த 2 பேர் தகராறு செய்துள்ளனர். அப்போது தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த இருவரும் சிவகுமாரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை தாக்கிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகுமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரபாகரன் என்கிற மருதைராஜ், தீபக் மற்றும் அவர்களை தூண்டியதாக தி.மு.க. பிரமுகர் கதிர்வேல், பிரபல வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவி முருகையா ஆகியோர் மீது சிவகுமாரின் மனைவி மைதிலி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் பிரபாகரன், தீபக் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் கதிர்வேல், தொழிலதிபர் ரவி முருகையா ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் ரியல் எஸ்டேட் அதிபரின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.