Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிரோமணி அகாலிதள முக்கிய தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பாஜகவில் இணைந்தார்.

0

'- Advertisement -

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக, இந்த முறை தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் இருந்தபோதிலும் சீக்கிய வாக்காளர்களை குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. சீக்கியர்களுக்காகவும், பஞ்சாபியர்களுக்காகவும் மோடி அரசு செயல்படுத்திய திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும் டெல்லி குருத்வாரா கமிட்டி தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா இன்று பாஜகவில் இணைந்தார்.

மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் சிர்சா.

அதன்பின்னர் உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

தலைநகரில் அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கியவர் சிர்சா. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களை வலுவாக ஆதரிக்கும் தலைவராகவும் இருந்தார். அவரை வரவேற்ற அமித் ஷா, சீக்கிய சமூகத்தின் நலனுக்கான பாஜகவின் உறுதிப்பாட்டின் மீது சிர்சா நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். அவர் கட்சியில் இணைவது இந்த உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிர்சா, சீக்கியர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக எப்போதும் குரல் கொடுத்துவருவதாக கூறினார்.

தனது சமூகத்துக்காகவும், கடந்த 70 ஆண்டுகால பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் பாஜகவில் இணைந்ததாக கூறிய சிர்சா, தனது சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்தார்.

பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.