ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4. ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்ற தமிழக வீரர்கள்.
ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4. ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை வென்ற தமிழக வீரர்கள்.
இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
4 ஆண்டுகளுக்கு பின் வெற்றிவாகை சூடி உள்ளது.
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற்றது. இந்தஆக்கி போட்டியில் இந்தியாவில் ரெயில்வேயில் உள்ள 8 ஆர்.பி.எப். அணிகள் பங்கேற்றன.
முன்னதாக தெற்கு ரெயில்வே சார்பில் இந்த ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி பொன்மலை ரெயில்வே விளையாட்டு பயிற்சி திடலில் தெற்கு ரெயில்வே ஆர்.பி.எப். போலீஸ் ஐ.ஜி.பிரேந்திரகுமார் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் (ஸ்போர்ட்ஸ்) செங்கையா மற்றும் திருச்சி ஆர்.பி.எப். முதுநிலை கமிஷனர் ராமகிருஷ்ணா, உதவி கமிஷனர் சின்னத்துரை ஆகியோர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் குழு மேலாளர் வர்கீஸ் (சேலம்), கேப்டன் ராஜ்குமார் (திருச்சி), பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையிலான தெற்கு ரெயில்வே ஆர்.பி.எப். அணி ஓடிசா புறப்பட்டு சென்றது.
இந்தியாவில் இருந்து தென்கிழக்கு மத்திய ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கிழக்கு ரெயில்வே, தெற்கு ரெயில்வே, உள்ளிட்ட 8 ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
சென்னை தெற்கு ரெயில்வே அணியில் திருச்சி 7,சென்னை-6, மதுரை-2, சேலம்-1 என 16 ஆர்.பி.எப். வீரர்கள் ஆக்கி போட்டியில் கலந்து கொண்டனர்.
பல்வேறு ரெயில்வே ஆர்.பி.எப். அணிகளுடன் நடந்த ஆக்கி போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் காலை அரை இறுதிகான ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி-தெற்கு கிழக்கு மத்திய ரெயில்வே அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே (சென்னை) அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதைத்தொடர்ந்து மாலையில் இறுதிப்போட்டி நடந்தது. இதில் சென்னை தெற்கு ரெயில்வே-டெல்லி வடக்கு ரெயில்வே ஆர்.பி.எப். அணிகள் மோதியது. இரு அணி வீரர்களும் பந்தை நகர்த்தி சென்று அபாரமாக ஆடினாலும் கோல் எதுவும் போட முடியாமல் திணறினர்.
ஒரு கட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி வீரர் வினோத் அடித்த பந்து கோலுக்குள் விழுந்தது. அதன்பின்னர் யாரும் கோல்போட முடியவில்லை. ஆக 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஆக்கி போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே ஆர்.பி.எப். அணி வெற்றி வாகை சூடியது. அந்த அணிக்கு சுழற்கோப்பையை, ஒடிசா ரெயில்வே பொதுமேலாளர் வழங்கி பாராட்டினார்.
மேலும் தெற்கு ரெயில்வே அணியில் இடம் பெற்ற ஆர்.பி.எப்.வீரர்கள் அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.