திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டத்தால் டாஸ்மாக் கடையை மூடிய மாவட்ட நிர்வாகம்.
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டத்தால் டாஸ்மாக் கடையை மூடிய மாவட்ட நிர்வாகம்.
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டத்தால்
டாஸ்மாக் கடையை அதிரடியாக மூட உத்தரவு. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரிதுறை ரோட்டில் “டாஸ்மாக்” மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்தநிலையில் குடிமகன்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக புகார் எழுந்தது. இந்த கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று மீண்டும் பாலக்கரை பகுதி குழு சார்பில் டாஸ்மாக் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தையடுத்து சாலையின் இரு பக்கங்களிலும் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கிழக்கு தாசில்தார் ஷேக் முஜிப், உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் ஏற்கனவே, இந்த கடையை மூடுவதாக 4 முறை உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கடையை மூடுவதாக தெரிவித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என உறுதியாக தெரிவித்தனர்.
இதையடுத்து தாசில்தார் கலெக்டர் சிவராசுவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் உடனே தற்காலிகமாக கடையை மூடி விடுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதுகுறித்து தாசில்தாரும் போராட்டக்காரர்கள் முன்பு உறுதி செய்தார்.இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் பட்டாசு வெடித்து தங்களது போராட்ட வெற்றியை கொண்டாடினர்.

