விபத்தில் உயிரிழந்த தினமணி நிருபர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை அமைச்சர் கே.என்.நேரு உறுதி.
விபத்தில் உயிரிழந்த தினமணி நிருபர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை அமைச்சர் கே.என்.நேரு உறுதி.
விபத்தில் உயிரிழந்த திருச்சி தினமணி செய்தியாளர்
உடலுக்கு அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி.
திருச்சி மாவட்டத்தில் தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்த எ. கோபி சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், தினமணி செய்தியாளர் எ. கோபி மற்றும் அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து இருவரது உடல்களும் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி :
அதனைத் தொடர்ந்து, மறைந்த கோபியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், திருச்சி மண்டல அஞ்சல்துறைத் தலைவர் கோவிந்தராஜன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். வனிதா, மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், உதவி இயக்குநர் த. செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக்ராஜ், திமுக மாவட்டப் பிரமுகர் வைரமணி,
அனைத்து ஊடக உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கோபியின் உடல் திருச்சியிலிருந்து அவரது சொந்த ஊரான தருமபுரிக்கு ஆம்புலன்சில் புறப்பட்டது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரமும், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ. 10 ஆயிரம் நிதியுதவிகளை வழங்கினர்.
கோபியின் மனைவி இந்துமதிக்கு உள்ளாட்சித் துறையில் வேலை பெற்றுத் தருவதாக அமைச்சர் நேரு உறுதியளித்துள்ளார். மேலும் கோபியின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதாக அமைச்சர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.