மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தினர் வேண்டுகோள்.
திருச்சியில், மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்கத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:-
மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக
அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்படுகிறது. இவ்வாறு துளைபோட மிருகவதை தடை சட்டப்பிரிவும் அனுமதிக்கிறது.
எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வாரம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், ‘உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.
தற்போது இந்த வழக்கின் மூலம், புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம்” என்று கருத்து தெரிவித்துள்ளததுடன்,
இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
உண்மையில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இந்த வழக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
நமது நாட்டில் உழவுதான் முக்கியத் தொழில் இன்னும் பல கிராமங்களில் ஏர் உழுதல் தொடங்கி கதிர் அறுவடை செய்து, நெல் மூட்டைகளை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது வரை அனைத்து நிலைகளிலும் விவசாயிகளுக்கு துணையாக இருப்பது மாடுகள்தான்.
காளை மாடுகள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கக்கூடிய பசு மாடுகளையும் கூட மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், பட்டிகளில் கட்டி வைப்பதற்கும் மூக்கணாங்கயிறு மிகவும் அவசியம். அது இல்லாவிட்டால் யாராலும் மாடுகளிடம் நெருங்கக்கூட முடியாது. அவற்றுக்கு உணவளிக்கவும் முடியாது.
அதனால்தான் ஒவ்வொரு மாட்டையும் மூக்கணாங்கயிறு கட்டி பராமரித்து வருகின்றனர். இது நேற்று இன்று வந்த பழக்கம் அல்ல காலம்காலமாக விவசாயிகள் இப்படித்தான் பின்பற்றி வருகின்றனர்.
மாடுகளுக்கும்,
மனிதர்களுக்குமான இடையேயான உறவுப்பாலமாக மூக்கணாங்கயிறு இருக்கிறது. இது நன்கு தெரிந்தும்கூட, இப்படியொரு வழக்கினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அணிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளின் சார்பில் உயர்நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும், இந்த விசயத்தில் நல்ல முடிவெடுக்கக் கோரியும் நாங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம்.
அந்த மனு விசாரணைக்கு வரும்போது எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளோம். இந்த வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம் எனக் கூறினார்.
பேட்டியின்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்புநலச் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா,மாவட்ட தலைவர் ஓலையூர் மூக்கன்,மாவட்ட பொருளாளர் பழனிவேல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.