திருச்சி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில்
தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர்
சிலை அமைக்கும் பணிகள் தொடக்கம்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கென சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி கான்கிரீட் அடித்தளம் மற்றும் பீடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடிய உயரத்திலும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அதைவிட உயரமாக அதாவது 37 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூரில் கொள்ளிட்டக்கரையில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பீடம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சிலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் இரா. வாசுதேவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில், முதலில் 33 அடி உயர ஆஞ்சநேயர் சிலைதான் அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், இதற்காக நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் கல் தேடியபோது, 40 அடி ஊயரத்தில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைப்பது என மாற்றி முடிவு எடுத்தோம்.
இதற்காக சுமார் 105 டன் எடையிலான ஒரே கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன. துர்கா சிற்பக் கலைக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் சிலை வடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆஞ்சநேயர் சிலையுடன், அங்கு சிறிய அளவில் கோயிலும் அமைக்கப்பட்டு அதில், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
அந்த சிலைகள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டு விட்டன. அனுமர் சிலை மட்டுமே கொண்டு வரவேண்டியுள்ளது.
இந்நிலையில் சிலை அமைப்பதற்கா பீடம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கென பள்ளம் தோண்டப்பட்டு தரைக்கு கீழே 9 அடியும் தரையிலிருந்து மேலே 4 அடியும் என 13. அடி உயரத்தில் பீடம் அமைக்கப்படுகின்றது.
அதன் மேல் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். தொடர்புடைய பணிகள் நிகழாண்டு மார்கழி மாதத்தில் வரும் அனுமர் ஜெயந்திக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் .
இக்கோயில் அமையவுள்ள இடத்தில் தற்போது, 1000 கோடி முறை ஸ்ரீராமஜெயம் (ராம நாமத்தை ) எழுதிய புத்தகம் பூமி பூஜை செய்யப்பட்டு, பூமிக்குள் பிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது. தவிர கோ சாலையும் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.
பக்தர்கள் அளித்து வரும் நன்கொடையை கொண்டு மட்டுமே இக்கோயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. யாரிடமும் கட்டாயப்படுத்தி எந்த நிதி வசூலும் மேற்கொள்ளவில்லை.
தாமாகவே வந்த நிதியைக் கொண்டுதான் பணிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை, அனுமத் உபாசகர் இரா. வாசுதேவர், எண். 69-141, தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி-6 என்ற முகவரிக்கு நன்கொடைகளை அனுப்பலாம் .
இந்தியாவிலேயே அதிக உயரமாக ஆந்திரப்பிரதேசத்தில் பரிதாலாவில் 135 அடி உயரத்தில் அமைக்கப்பட்டதுதான் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒடிசா 108.9 அடி, தில்லி, சிம்லா 108, நந்துரா 105 என மொத்தம் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிக உயரங்களில் ஆஞ்சநேயர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் முதலாவது உயரமான சிலையாக இது அமையவுள்ளது என்கின்றார் வாசுதேவர்.