மாணவர்களுக்கு கல்வி ரேடியோவில் பாடம் போதிக்கும் சித்திவயல் அரசுப்பள்ளி தமிழ் ஆசிரியை ரா.முருகேஸ்வரிக்கு பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பாராட்டு
மாணவர்களுக்கு கல்வி ரேடியோவில் பாடம் போதிக்கும் சித்திவயல் அரசுப்பள்ளி தமிழாசிரியை ரா.முருகேஸ்வரியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
கொரானா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும்,ஆன்லைன் வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது.இருந்தாலும் மாணவர் நலன் கருதி தமிழாசிரியை ரா. முருகேஸ்வரி 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மனப்பாடப்பாடல்கள்,பாடங்கள் மற்றும் பொது அறிவை வளர்க்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோக்களை கல்வி ரேடியோ மூலம் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு பாடம் போதித்து வருகிறார்.
இது குறித்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சித்திவயல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ரா.முருகேஸ்வரி கூறியதாவது: கல்விப் பணியும் சேவை பணியும் என் இரு கண்களாக என் வாழ்நாளில் பின்பற்றி வரும் நான் சிவகங்கை மாவட்டம் சித்தி வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஏழை எளிய மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் என்னால் ஆன உதவிகளை தொடர் பணியாக செய்து வருகிறேன். பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும் எனது சேவை தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கிறது என்பது மகிழ்ச்சி. கடந்த மார்ச் 2020 தொடங்கிய ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் மாணவர்களுடன் தொடர்ந்து கல்விச் சேவை செய்திட ஏப்ரல் 2020 இல் அகல் விளக்கு என்னும் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன்மூலம் 6 முதல் 10 வகுப்பு வரை அனைத்து மனப்பாட பாடல்கள் அறிவை வளர்க்கும் கலை மற்றும் கல்விப் பணிகளை பதிவேற்றம் செய்து ஊக்கப் படுத்தி வருகிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பல மாணவர்களை இணையவழி வாயிலாகவும் நேரடியாகவும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்து பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்று தந்துள்ளேன். யூடியூப் சேனல் , ஆன்லைன் வகுப்பு மற்றும் மாணவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று பாடம் நடத்துவது என பல்வகையில் கற்றலை வெளிப்படுத்தி வருகிறேன். இச்சூழ்நிலையில் முத்தாய்ப்பாய் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் ,காத்தாழைபள்ளி ஆசிரியர் கார்த்திக் ராஜாவால் தொடங்கப்பட்ட ஆன்லைன் கல்வி ரேடியோவில் நானும் என்னை இணைத்துக் கொண்டு பாடங்கள் மற்றும் பொது அறிவு பாடல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பல ஆடியோக்கள் தயார் செய்து கல்விப் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு ஊராக சென்று கல்வி டிவி ,ஆன்லைன் கல்வி ரேடியோவின் கால அட்டவணை வழங்கி கற்றலை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறேன்.
அரசுப் பள்ளி மற்றும் அனைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக தன்னார்வமிக்க 65 அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் உருவானது கே.ஆர்.டீம் ஆன்லைன் கல்வி ரேடியோ ஆகும்.இதில் 1 முதல் 10 வகுப்பு வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்று 105 ஆசிரியர்களுடன் வெற்றிகரமாக தமிழ்வழிக்கல்வி ஆங்கிலவழிக் கல்வி என இரண்டு பெயர்களில் ஆன்லைன் கல்வி ரேடியோ ஒளிபரப்பாகி வீறு நடை போட்டு வருகிறது இதுவரை 5 லட்சம் பேர் பார்த்து பயன் அடைந்துள்ளனர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பல ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் இணைந்து ஆன்லைன் கல்வி ரேடியோவை மாணவர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆன்லைன் கல்வி ரேடியோவில் பல சிறப்பம்சங்கள் உள்ளன .கால அட்டவணை பின்பற்றப்படுகிறது 2G பிரவுசர் உள்ள போனில் கூட கேட்கலாம். www.kalviradio.com என்ற URL பயன்படுத்தி எங்கேயும் எந்த நேரத்திலும் கற்களை வலுப்படுத்த பிளேலிஸ்ட் பகுதி உள்ளது .மாணவர்களின் திறனை வெளிப்படுத்த மின்மினிகள் நேரமும் உண்டு .பெற்றோர் கண்காணிப்பும் இருப்பதால் மாணவர்களின் மனநலம் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது .கற்றலில் கேட்டல் நன்று என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆன்லைன் கல்வி ரேடியோவை கேட்டு அதை வலுப்படுத்த வளப்படுத்த முடியும்.
மாணவர்களை பாராட்டி இதுவரை 1800 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளோம். 95 மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர் . கடந்த ஆறு மாத காலமாக மிகச் சிறந்த முறையில் ஆன்லைன் கல்வி ரேடியோவில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.நான் தற்பொழுது கல்வி ரேடியோவில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு மாணவனாக வீடு தேடிச்சென்று போன் வசதியில்லாத மாணவர்களை கண்டறிந்து போன் வாங்கி கொடுத்தும் வருகிறேன். எச்சூழ்நிலையிலும் தடைபடாது கல்வி கற்க என்னாலான முயற்சிகளையும் செய்து வருகிறேன் .அதற்கு ஆன்லைன் கல்வி ரேடியோ மிகச் சிறந்த முறையில் எனக்கு ஊக்கமளித்து வருகிறது .கல்வி டிவி, ஆன்லைன் கல்வி ரேடியோ ,புத்தகம் இவற்றின் துணைகொண்டு மாணவர்களின் கற்றலை மேம்படுத்த வலுப்படுத்த,வளப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்..