தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 15-வது சட்டசபை நிறைவடைந்து 16-வது சட்டசபை அமைந்துள்ளது.
16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் 21-ந்தேதி (நாளை) தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு கடந்த 9-ந்தேதி அறிவித்தார்.
கலைவாணர் அரங்கத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள்.
காலை 10 மணியானதும் கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதன் பின்னர் கவர்னர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவடையும்.
அதன்பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
சட்டசபைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டசபையில் இருக்கைகள், சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. அதோடு கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டசபையில் கடைப்பிடிக்கப்படும்.
இந்த கூட்டத்தொடரில் ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக அரசினர் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.