Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

11ம் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வேண்டுகோள்

0

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான
வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடவேண்டும்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை எதனடிப்படையில் நடைபெறும் என்பது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்விதுறை வெளியிட வேண்டுமென அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தென் தமிழக செயலாளர் த. சுசீலா வெளியிட்டுள்ள அறிக்கை யில் :-

தமிழக அரசு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து உள்ள நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் எதனடிப்படையில் வழங்கப் போகிறார்கள் என்பது தொடர்பாக இன்னும் தெளிவான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் மாணவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

மதிப்பெண் எதன் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது என்பதையும் உயர் கல்விக்கான (11 ஆம் வகுப்பு ) சேர்க்கையை கணக்கிடுதல் குறித்தும் வழிகாட்டுதலும் விரைந்து வெளியிடப்பட வேண்டும் .

நீட் தேர்வு கிடையாது என்ற தமிழக அமைச்சர்களின் அறிவிப்பு மாணவர்களின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17 மடங்கு உயர்ந்துள்ளது . தமிழகத்தில் நீட் தேர்விற்கு கடந்த ஆண்டு 1 லட்சத்து 21, 617 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் 99, 610 பேர் தேர்வு எழுதியதில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வின் தேர்ச்சி விகிதம் 2019-20 ல் 48.58 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 2020-21 ஆண்டில் 57.44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி தேசிய அளவில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

அதேபோன்று 720க்கு 710 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் 8 ஆம் இடத்தைப் பெற்றவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் நீட் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நீட் தேர்வில் முன்னேறிய தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

தமிழக மாணவர்களாலும் அரசுப் பள்ளி மாணவர்களாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை உடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அதிக அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு தமிழக ஆளுநரை சந்தித்து நீட் தேர்வு தொடர்பான நிலைமைகளை எடுத்து கூற உள்ளது.

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு வாயிலாக நடைப்பெறும் எனவும், பின்னர் நுழைவு தேர்வு ரத்து எனவும் இருவேறு கருத்துகளை தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே 11 ஆம் வகுப்பு மாணவர் எதனடிப்படையில் நடைப்பெறும் என்பதை உரிய வழிக்காட்டு நெறிமுறைகளுடன் பள்ளிக்கல்விதுறை வெளியிட வேண்டும் என சுசிலா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.