தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா நம்பிக்கை
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் கடைகளை திறந்து கொள்ளலாம் என்ற அரசின் அனுமதியை பலரும் தவறாக பயன்படுத்தியதால், அந்த தளர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அதேசமயம் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை செய்யவும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், கடைகளை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்காவது திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதனிடையே, அடுத்தகட்ட ஊரடங்கு, தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, அடுத்தகட்ட ஊரடங்கை அறிவிக்கும் போது, கடைகளை திறந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து, வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் விக்கிரமராஜா தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.மேலும், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளுடனும், தொற்று குறைவான இடங்களில் சில தளர்வுகளுடனும் கடைகளை திறக்க அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற 7ஆம் தேதி காலை முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்கப்படலாம் எனவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
						 
						


