மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தி உள்ளனர் புதுகை விஜய் மக்கள் இயக்கத்தினர்.
முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பொதுமக்களை தங்கள் உயிரை பணையம் வைத்து காப்பாற்றி வருகிறார்கள் முன்களப் பணியாளர்களான சுகாதாரப்பணியாளர்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 1000 மருத்துவர்களுக்குமேல் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில், முன்களப் பணியாளர்களான மருத்துவர்களையும் செவிலியர்களையும் ஊக்கப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் 1 கிராம் தங்க நாணயம் அளித்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்ட 6 மருத்துவமனைகளில் இந்த மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி உதவி செய்தனர்.
குரங்குகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி அருகில் பழங்கள், தண்ணீர் கிடங்கையும் அமைத்து பாராட்டுகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.