பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
“பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பிளஸ் 2 தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம்.
கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பிளஸ் 2 தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். கொரோனாவை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றலாம்.
பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்