கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது, “நாட்டு மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது (வயது வந்த) அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த 216 கோடி தடுப்பூசிகளில் எந்தெந்த தடுப்பூசிகள் எவ்வளவு கிடைக்கும், அவற்றை தயாரித்து வழங்குவது யார், அது தற்போது எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது பற்றிய ஒரு பார்வைதான் இது-
கோவிஷீல்டு – 75 கோடி, கோவேக்சின்- 55 கோடி, பயாலஜிக்கல் இ- 30 கோடி, ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி, நோவாவேக்ஸ் – 20 கோடி, பி.பி.மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி- 10 கோடி, ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. – 6 கோடி, ஸ்புட்னிக்-வி 15.6 கோடி.
ஆக மொத்தம் 216.6 கோடி தடுப்பூசி ஆகும். இந்த 8 வகை தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டு நாடெங்கும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
8 தடுப்பூசிகள் விவரம் கீழ் வருமாறு:
* கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆய்வுகளின்படி இந்தத்தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டில் உள்ளது.
* கோவேக்சின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்கி வருகிறது. இதன் செயல்திறன் 81 சதவீதம். இந்தியா, இங்கிலாந்து, பிரேசில் வகை கொரோனாவுக்கும் எதிராக செயல்படுகிறது. தென்ஆப்பிரிக்க வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.
* ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இது கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள 3-வது தடுப்பூசி ஆகும். ஆரம்பத்தில் இறக்குமதி செய்தாலும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது. 91.6 சதவீதம் செயல்திறனை இது கொண்டிருக்கிறது. 21 நாள் இடைவெளியில் இதன் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது பயன்பாட்டில் வந்துள்ளது.
* நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் புனேயில் இருக்கிற இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என்றிருக்கும். இது 96.4 சதவீத செயல்திறனைக் காட்டி இருக்கிறது.
* பி.பி. மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி தயாரித்து வழங்குகிறது. இது தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தார் சொல்கின்றனர்.
* பயாலஜிக்கல் இ தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் பயன்பாட்டுக்கு வரும். இதன் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கப்போகிறது.
* ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ. தடுப்பூசியை ஆமதாபாத்தின் ஜைடஸ் கேடிலா நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இதன் 3-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இது ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவலகள் வெளியாகி உள்ளன. இது கோவேக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.
* ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இது மனிதர்களுக்கு செலுத்தி இனிதான் பரிசோதிக்கப்படவேண்டும். 2 மாதங்களில் இது தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கண்ட 8 தடுப்பூசிகளுடன் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் வந்து விட்டன. ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு நேற்று வந்து உள்ளது. அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே திட்டமிட்டுள்ளபடி இந்த தடுப்பூசிகள் 216 கோடி டோஸ் பயன்பாட்டுக்கு தயாராகி விட்டால் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, மந்தை எதிர்ப்புச்சக்தியைப்பெறும் நிலை உருவாகும். அது கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாக அமையும்.