இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்பொழுது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில், நேற்று நடந்த 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோலி 3 ஆயிரம் ரன்களை எட்ட 72 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அணி வெற்றி பெற உதவியதுடன் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
கோலி மொத்தம் 87 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 3,001 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்டின் குப்தில் 2வது இடத்தில் உள்ளார். அவர் 99 போட்டிகளில் கலந்து கொண்டு 2,839 ரன்களை சேர்த்துள்ளார். 3வது இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா உள்ளார். அவர், 108 போட்டிகளில் பங்கேற்று 2,773 ரன்களை குவித்துள்ளார்.
கோலியின் ஆட்டம் தவிர்த்து அறிமுக போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இஷான் கிஷான் அரை சதம் (56 ரன்கள்) அடித்தது வெற்றியை எட்டி பிடிக்க உதவியது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமன் பெற்றுள்ளது. 3வது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ளது.