பாஜக, தேமுதிக, தமாகா மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பா.ம.க.வுடன் கடந்த மாதம் 27-ந்தேதி கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டது. பாஜக, தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில்,
அடுத்த கட்டமாக தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேசப்பட உள்ளது. இதுதவிர,கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசுக்கட்சி, ஜான்பாண்டியன் கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளுக்கும் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் தலைவர் டாக்டர் சேதுராமன் அதிமுக அலுவலகத்தில், வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் தரப்பில் 3தொகுதிகள் வரை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியேவந்த அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தேவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நீடிக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாகவே நடந்தது. காரைக்குடி, சிவகங்கை, திருவாடானை, மதுரை வடக்கு, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், கடையநல்லூர் ஆகியவற்றில் ஏதேனும் 3 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம். விரைவில் முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், கூட்டணியை இறுதி செய்துவிட்டு, விரைவாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கான பணியில் அதிமுக இறங்கியுள்ளது. விருப்ப மனுக்கள் பெற்று வரும் நிலையில், விரைவாக நேர்காணல் நடத்தி, வரும் மார்ச் 8-ம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு கடந்த 24 தேதி முதல் விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை 2 நாட்கள் ( பிப்.5 என்பதை பிப்.3 என) அதிமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.