திருச்சி பொன்மலை சங்கத் திடல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது57 ) சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
அந்த பகுதியில் திமுக நிர்வாகியாகவும் உள்ளார் .
பொன்மலை பொன்னேரிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கதிர் (எ) கதிர்வேல் (வயது 42) அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிர்வாகியாக உள்ளார்.
செல்வராஜின் சவுண்ட் சர்வீஸ் கடையானது பொன்னேரிபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. கடைக்கு எதிர்புறம் தினமும் அவரது வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.
சம்பவத்தன்று தனது வாகனத்தை நிறுத்திய போது அங்கிருந்த கதிர்வேல் வாகனத்தை அப்புறப்படுத்த சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கதிர்வேல் செல்வராஜை பலமாக தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது. மேலும் கதிர்வேலுக்கும் காயம் பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.